“எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்!” – மாஞ்சோலை தொழிலாளர்களின் வேதனைக்குரல்; மறுவாழ்வு எப்போது?

“எங்களை கருணைக் கொலை செய்யுங்கள்!” – மாஞ்சோலை தொழிலாளர்களின் வேதனைக்குரல்; மறுவாழ்வு எப்போது?

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஊத்து பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் (18.06.2026) மாலை 4.30 மணியளவில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சுமார் 8 மணி நேர தாமதத்திற்குப் பிறகே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

படுகாயமடைந்த நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட வள்ளியம்மாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலும் 12 மணி நேரத்திற்குப் பிறகே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுவதாக வள்ளியம்மாளின் கணவர் பால்சாமி மற்றும் ஊத்து 11-வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் ஆகியோர் SDPI கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். இதையடுத்து SDPI மருத்துவ சேவை அணி சார்பில் தேவையான இரத்தம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வரும் வள்ளியம்மாளை SDPI மாநகர் மாவட்டத் தலைவர் கோட்டூர் எம்.கே. பீர்மஸ்தான், மருத்துவ சேவை அணியின் மாவட்ட துணைத் தலைவர் தாழை உசேன் மற்றும் கவுன்சிலர் ஸ்டாலின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்த கருத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. “மாஞ்சோலை பகுதியில் வசிக்கும் நாங்கள் தினந்தோறும் மரணத்தை எதிர்கொண்டு வாழ்கிறோம். எங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவில்லை என்றால், அரசிடம் கருணைக் கொலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வையுங்கள்” என அவர்கள் கண்ணீருடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதார மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள், மருத்துவ சேவைகள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்காக காத்திருக்கும் மாஞ்சோலை மக்களுக்கு புதிய அரசு நிரந்தர தீர்வையும் மறுவாழ்வையும் வழங்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மாஞ்சோலை மக்களின் கண்ணீருக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.