ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலீஸ்பேட்டை கிராமத்தின் தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக சீரான குடிநீர் விநியோகம் நடைபெறாததால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் தங்களது அன்றாட தேவைகளுக்கான தண்ணீரைப் பெற வெளிப்பகுதிகளில் உள்ள போர்வெல்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அங்கும் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காததால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறினர்.
மேலும், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின்வெட்டு காரணமாக தண்ணீர் ஏற்ற முடியாத நிலை இருப்பதாகவும், இதன் காரணமாக குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். குடிநீர் பற்றாக்குறையால் குடும்பங்களின் அன்றாட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்
இந்நிலையில், தங்களுக்கு இடையூறு இன்றி தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று வாலீஸ்பேட்டை – ஸ்ரீமுஷ்ணம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை மறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பேருந்தில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்ததை கருத்தில் கொண்டு, மாணவர்கள் பள்ளிக்கு தாமதமின்றி செல்ல வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலும், குடிநீர் பிரச்சினை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், உடனடி தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.






