சேரன்மகாதேவி பேரூராட்சியில் பரபரப்பு: தலைவி மீது முறைகேடு புகார் எதிரொலி – மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு!
சேரன்மகாதேவி, ஜூன் 6:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டம் பரபரப்பான சூழ்நிலைக்குள் அரங்கேறியது. பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் மீது எழுந்துள்ள முறைகேடு புகார்களின் விசாரணை நிறைவடையும் வரை மாமன்றக் கூட்டத்தை நடத்தக்கூடாது என வலியுறுத்தி பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
18 வார்டுகளை கொண்ட சேரன்மகாதேவி பேரூராட்சியின் தலைவராக தேவி ஐயப்பன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், பேரூராட்சி பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் போது பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் முன்அனுமதி பெறாமலும், பேரூராட்சி நிர்வாகத்திற்கு உரிய கட்டணங்களை செலுத்தாமலும், போலி ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் பேரூராட்சி தலைவி தேவி ஐயப்பன் மற்றும் அவரது கணவர் ஐயப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சேரன்மகாதேவி காவல் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவி தலைமையில் மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டால், அவருக்கு சாதகமான ஆவணங்கள் உருவாக்கப்படும் அபாயம் இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். எனவே, விசாரணை முடியும் வரை தலைவி தலைமையில் கூட்டம் நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்ததுடன், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பேரூராட்சி தலைவிக்கு எதிராக அதே மன்றத்தைச் சேர்ந்த கவுன்சிலர்களே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து கூட்ட அரங்கில் இருந்து வெளியேறிய சம்பவம் சேரன்மகாதேவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் மற்றும் உள்ளாட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.






