திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசுகிறார்.
சென்னை, ஜூன்.1 – நடந்து முடிந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது கட்சிக்கு 108 இடங்கள் கிடைத்தன. தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் விசிக, கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், அமமுக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்&அமைச்சர் பதவி ஏற்ற அவர் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பதவி ஏற்று 3 வாரம் ஆகி விட்ட நிலையில் அவர் வாக்காளர்களுக்க நன்றி தெரிவிக்க இன்று திருச்சி பயணம் செய்கிறார். அமைச்சர் ஆனந்த் அறிக்கை இதுபற்றி, தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:& தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொள்ளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, 01.06.2026 (இன்று) திங்கள்கிழமை, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணி முதல் நடைபெற உள்ளது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் வரவேண்டாம் குறிப்பாக, பாதுகாப்பு கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் – சிறுமியர், பள்ளி மாணவ – மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம். க £வல்துறையின் வழிகாட்டுதலின்படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும். கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனுமதிச் சீட்டு இல்லாத தவெகவினரும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, கியூஆர் குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.






