சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகே சாலை சேதம்
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி – உடனடி சீரமைப்பு கோரிக்கை
சேரன்மகாதேவி ரயில்வே கேட் அருகே சாலை பகுதியில் குடிநீர் பைப் லைன் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்குப் பிறகு சாலை சரிவர சீரமைக்கப்படாததால், தற்போது அந்த இடத்தில் பெரிய மேடு போன்ற அமைப்பு உருவாகி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் தினமும் இந்த சாலையை கடக்கும்போது சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மேடு தெளிவாக தெரியாத காரணத்தால் விபத்து அபாயமும் நிலவி வருகிறது.
இதுகுறித்து கடந்த வாரமே இரயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் முறையிட்டுள்ளனர்.
வரவிருக்கும் பள்ளி திறப்பிற்கு முன்பாகவே சாலையை முழுமையாக சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






