முன்னீர்பள்ளம் அருகே வாத்துகளை வாளால் வெட்டி கொன்ற மர்ம கும்பல்
நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகள் பலி – போலீசார் விசாரணை
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வாத்து பண்ணையில் புகுந்த மர்ம கும்பல் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துகளை வாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னீர்பள்ளம் அருகே வசித்து வரும் முப்புடாதி என்பவர் வாத்துகள் மேய்த்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது வாத்து பண்ணைக்குள் குடிபோதையில் வந்ததாக கூறப்படும் மர்ம கும்பல் சிலர், இலவசமாக வாத்துகளை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முப்புடாதி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த வாளால் வாத்துகளை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் சுமார் நூறு வாத்துகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முப்புடாதி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






