மன்னார்குடி: தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக 11 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மட்டும் அக்கட்சி வேட்பாளர் எஸ்.காமராஜ் வெற்றி பெற்றார்.
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசை ஆதரித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னதாக அவர் தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுத்த வீடியோவும், அதன் பிறகு ‘‘நான் கடிதம் எதுவும் கொடுக்கவில்லை’’ என்று டிடிவி தினகரனுடன் சேர்ந்து பேட்டியளித்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மன்னார்குடியில் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு எஸ்.காமராஜ் எம்எல்ஏ பேசுகையில், எனக்கு சென்னையில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. சூழலை, வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தெரியாதவன் திறமையான மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. என்னை யாரும் மிரட்டவோ, அச்சுறுத்தவோ முடியாது. தமிழக அரசியலில் அடுத்த சில மாதங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும் என்றார்.






