சென்னை: தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவரை அவை முன்னவர் செங்கோட்டையன், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அதேபோல், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயூஎம்எல் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு தமிழக முதல்வராக கடந்த 10ம் தேதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதேபோல், தற்காலிக சபாநாயகராக கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, 17வது சட்டமன்றத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் கூடியது. அன்றைய தினம் 232 எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அன்றைய தினம் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனு தாக்கல் செய்யலாம் என்று தற்காலிக சபாநாயகர் கருப்பையா அறிவித்தார். சபாநாயகர் தேர்தல் 12ம் தேதி (செவ்வாய்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபடி நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் தற்காலிக சபாநாயகர் கருப்பையா பேசினார். அப்போது, சபாநாயகருக்கான தேர்தலில் போட்டியிட ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் மட்டுமே விண்ணப்பம் அளித்துள்ளார். முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார். அமைச்சர் என்.ஆனந்த் வழிமொழிந்துள்ளார். இதனால் ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். அதேபோன்று துணை சபாநாயகர் பதவிக்கு எம்.ரவிசங்கர் மட்டுமே விண்ணப்பித்துள்ளார். முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் வழிமொழிந்துள்ளார். அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மற்றும் துணை சாநாயகருக்கு என்னுடைய வாழ்த்துகள். இத்துடன் எனது பணியை முடித்துக்கொள்கிறேன் என்று கூறி சபாநாயகர் இருக்கையை விட்டு இறங்கி சென்றார்.
இதனையடுத்து அவை முன்னவர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரின் கையை பிடித்து அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவராக அறியப்படும் ஜே.சி.டி.பிரபாகர் சட்டமன்ற நடைமுறைகள் மற்றும் நிர்வாக அனுபவத்தில் திறமை வாய்ந்தவர் ஆவார். இதனால் அவரின் தேர்வு ஆளும் தரப்பில் முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது. அதேபோல், துணை சபாநாயகர் பதவிக்கு துறையூர் தொகுதி எம்எல்ஏ ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரவிசங்கர், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இளம் அரசியல்வாதியாக கவனம் பெற்றுள்ளார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் புதிய சபாநாயகரை வாழ்த்தி பேசினர். இறுதியில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினர்.
ஜே.சி.டி.பிரபாகருக்கு சபாநாயகர் பதவி ஏன்?
தமிழ்நாடு முதல்வர் விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில் வன்னியர் சமூகப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் வன்னியர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பது அச்சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஜே.சி.டி.பிரபாகர் கடந்த 1980ம் ஆண்டு முதல் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் பயணித்து வந்தவர். இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் மூலம் தன்னை அண்மையில் இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த இவர் சபாநாயகராக இருப்பதன் மூலம் எளிதாக அவையை நடத்திச் செல்வார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பேரவையில் எதிரொலித்த அதிமுக குடுமிப்பிடி சண்டை
சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு முடிந்து அனைத்துகட்சி உறுப்பினர்களும் பேசினர். வழக்கமாக வாழ்த்தி பேசுவதற்காக ஒரு கட்சியில் ஒருவருக்கு மட்டும் சபாநாயகர் வாய்ப்பினை வழங்குவார். அந்தவகையில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதனையடுத்து தனக்கும் பேச அனுமதி அளிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி கையை உயர்த்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவருக்கு வாய்ப்பினை வழங்கினார்.
இதனை கண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள், எப்படி இவரை பேச அனுமதி அளிக்கலாம் என தங்கள் அருகில் இருந்த எம்எல்ஏக்களிடம் பேசிக் கொண்டனர். இதற்கு பதிலடியாக, எஸ்.பி.வேலுமணியின் ஆதரவு எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் தங்களுக்குள் பேசிக்கொண்டதால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கனவே, சட்டமன்ற குழுத்தலைவராக எஸ்.பி.வேலுமணி தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் தனித்தனியாக ஆதரவு கடிதத்தை வழங்கிய நிலையில் பேரவையில் நேற்று நடந்த சம்பவம் அதிமுகவின் குடுமிப்பிடி சண்டை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.






