சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மெஜாரிட்டி கிடைக்காமல் தவித்து வருகிறார். மெஜாரிட்டிக்கு இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இந்நிலையில் தான் 2 எம்எல்ஏக்களை வைத்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது முடிவை அறிவிக்க உள்ளார். தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று விஜய், திருமாவளவனிடம் கேட்டு கொண்ட நிலையில் அவர் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து எடுத்த முடிவை மாலை 4 மணியளவில் அறிவிக்கிறார்.
நேற்று மாலை 5 மணியளவில் திருமாவளவன் தனது கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் ஆன்லைனில் நடந்தது. அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதுபற்றி விவாதம் நடத்தி திருமாவளவன் விஜய்யின் தவெகவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துள்ளார்.
ஆனால் அந்த முடிவை அவர் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த முடிவை இன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமாவளவனின் அறிவிப்பு மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனென்றால் தமிழக சட்டசபையில் மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய்யின் தவெகவிடம் 107 (விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதால் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது) எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும் காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் ஆதரவு தெரிவித்துள்னளர். இதனால் தவெக வசம் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. திருமாவளவனின் விசிகவிடம் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் ஆதரவு தெரிவிக்கும்பட்சத்தில் விஜய்யால் எளிதாக மெஜாரிட்டி மார்க் 118யை எட்டி ஆட்சியை பிடித்து முதல்வராக முடியும். இதனால் திருமாவளவனின் இன்றைய அறிவிப்பு என்பது தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.






