கொளத்தூர் தொகுதியில் கண்கலங்கியபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி

சென்னை: கொளத்தூர் தொகுதியில் கண்கலங்கியபடி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். கொளத்தூர் மேயர் சிட்டிபாபு மேம்பாலத்தில் இருந்து தொண்டர்கள் படை சூழ கொளத்தூர் ஜி.கே.எம் காலனி வழியாக பெரவள்ளூர் காவல் நிலையம், சிவ இளங்கோ சாலை, அகரம் சந்திப்பு வரை திறந்தவெளி ஜீப்பில் சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்கலங்கியபடி மீண்டு வா ஸ்டாலினே…மீண்டு வா தலைவா… என கோஷமிட்டனர். தொண்டர்கள் கண்கலங்கியதை பார்த்து ஸ்டாலினும் கண்கலங்கினார். வழிநெடுகிலும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாகமாக நன்றி தெரிவித்தனர்.

அப்போது பெண்கள் பலரும் கதறி அழுத்தனர். இதனைக் கண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்கலங்கிய நிலையில், தொண்டர்களை பார்த்து கை அசைத்து அழக்கூடாது என சைகை காண்பித்து தேற்றினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சென்றார்.

‘தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு’

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வௌியிட்ட பதிவில், ‘‘கொளத்தூருக்கும், எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு, 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள், அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார்.

உண்மையாக உழைப்பேன் உங்களோடுதான் இருப்பேன்: மு.க.ஸ்டாலின் உருக்கம்

உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து எக்ஸ்தள பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:

கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்து திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்த கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்தூர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.

ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்’’ என்று கூறியுள்ளார்.