சென்னை: முதல்வர் பதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ததையடுத்து தலைமை செயலகத்தில் திமுக அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டு வருகிறது. இந்த அறைகளை தவெக அமைச்சர்கள் இனி பயன்படுத்துவார்கள்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார். அவரது கட்சி 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதை தொடர்ந்து விரைவில் விஜய் தலைமையில் புதிய அரசு நாளை (7ம் தேதி) பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் உள்ள திமுக அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்படுகின்றன. திமுக அமைச்சர்கள் அனைவரும் தங்களது அறைகளை தங்களின் உதவியாளர்கள் மூலம் வேகமாக காலி செய்து வருகின்றனர். அங்கிருக்கும் மறைந்த திமுக தலைவர் கலைஞர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்களையும் எடுத்து வருகின்றனர். இதுதவிர, அமைச்சர்கள் தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.
இதேபோல் அடையாறில் உள்ள திமுக அமைச்சர்களின் இல்லங்களையும் காலி செய்யும் பணி துவங்கி உள்ளது. அமைச்சர்கள் தங்களது பொருட்கள், உடைமைகளை எடுத்துச் செல்லும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்கும் விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகிக்க உள்ள அமைச்சர்கள் விரைவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகளை பயன்படுத்த உள்ளனர்.






