முதல்வர் ஸ்டாலினை நேரில் காண ஏக்கம்;
“உடன்பிறப்புகளுக்காக நேரம் ஒதுக்குங்கள்” – நெல்லை தி.மு.க. தொண்டரின் உருக்கமான வேண்டுகோள்
நெல்லை, மே 5 —
தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க., பாளை வடபகுதி, 8-வது வார்டு, சமாதானபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் டாக்டர் ரா. ஞானசோமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“விழுவது என்பதே எழுவதற்குத்தான். பெரியார் ஈ. வே. ராமசாமி , சி.என். அண்ணாதுரை, எம் கருணாநிதி ஆகியோரின் வழியிலும், தலைவர் ஸ்டாலின் வழிகாட்டுதலிலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய கொள்கைகளோடு வளர்க்கப்பட்டவன் நான்.
கட்சி எனக்கு என்ன செய்தது என்று நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. கையில் பலம் இருக்கும் வரை கருப்பு-சிவப்பு கொடியை உயர்த்திப் பிடிப்பேன். வாயில் பலம் இருக்கும் வரை ‘தலைவா, தலைவா’ என்று முழங்குவேன். காலில் பலம் இருக்கும் வரை கழகப்பணியும், மக்கள் பணியும் செய்து கொண்டே இருப்பேன்.
என் ரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் தலைவர் ஸ்டாலின் நினைவே நிறைந்திருக்கிறது. இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் அவரது பெயரைச் சொல்லியே துடிக்கிறது. உயிர் பிரியும் தருணத்திலும் ‘தலைவர் ஸ்டாலின் வாழ்க’ என்ற கோஷமே ஒலித்துக் கொண்டிருக்கும்.
தலைவரே, சிறிது காலம் மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கொடுங்கள். கடந்த காலங்கள் முழுவதும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் உழைத்து சோர்ந்து விட்டீர்கள்.
வருகின்ற ஐந்து ஆண்டுகளாவது உங்கள் நேரத்தை உடன்பிறப்புகளுக்காக ஒதுக்குங்கள். இதுவரை உங்களுடன் புகைப்படம் எடுக்க முடியாத கழக கண்மணிகளை நேரில் அழைத்து சந்தியுங்கள். அவர்களின் ஆசை பட்டமோ பதவியோ அல்ல; உங்கள் அருகில் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வீட்டுச் சுவரில் மாட்டி மகிழ்வதே.
உங்களை அருகிருந்து காணவும் ரசிக்கவும் உடன்பிறப்புகளாய் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. தொண்டரான டாக்டர் ரா. ஞானசோமராஜ் தனது உருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






