மதுரையே குலுங்க பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்; விண்ணதிர கேட்ட கோஷம்!

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று (01-05-26) லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட கள்ளழகர், இன்று அதிகாலை பச்சை பட்டுடுத்தி வைகையில் இறங்கி பக்தர்களுக்கு தங்கக் குதிரையில் அருள்பாலித்தார். முன்னதாககண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளர் கொண்டை, குத்தீட்டி, வலைதடியுடன் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருகை தந்தார்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா… கோவிந்தா…’ என முழக்கத்துக்கிடையே கள்ளழகர் வைகையில் இறங்கினார். வைகையில் எழுந்தருளிய கள்ளழகர் மீது மலர் தூவி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும், வைகையில் எழுந்தருளிய அழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா… கோவிந்தா…’ என முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று இரவு 9 மணியளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளி தரிசனம் தருகிறார்.