தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு- தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்

3 தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தற்போது கோடையின் வெப்பம் அதிகமாக இருந்தாலும், தலைவர்கள்- வேட்பாளர்களின் பிரசாரங்கள் அதனை விட அனல் கக்கியது.

தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கி உள்ளது. முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி திருவாரூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மாவட்டங்களில் பிரசாரம், பொதுக்கூட்டம், ரோடு ஷோ ஆகியவற்றில் கலந்துகொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகளையும், தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் பற்றியும் பேசினார். அதேபோல துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பிரேமலதா, வைகோ, கி.வீரமணி, செல்வப்பெருந்தகை மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். இந்த கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக கடைசி நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தியும்.பொன்னேரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்தார்.

அ.தி.மு.க. கடந்த 2021-ம் ஆண்டு இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் கண்டு உள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி மயிலாப்பூரில் தனது பிரசாரத்தை தொடங்கினார் தினமும் 2 அல்லது 3 இடங்களில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. ஆட்சியின் குறைகளை பட்டியலிட்டு பேசினார். அதோடு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து பிரசாரம் செய்தார்.

இந்த கூட்டணிக்கு ஆதரவாக நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ். டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தனர்.இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் பா.ஜனதா முதல்-மந்திரிகளும் தமிழகம் வந்து வாக்கு சேகரித்தனர்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு முதல் தேர்தலில் ஆட்சியை பிடித்தது போல த.வெ.க.வும் இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி களம் இறங்கி இருக்கிறது. அந்த கட் சியின் ஒரே நட்சத்திரமாக இருக்கும் விஜய், பல்வேறு மாவட்டங்களில் சென்று ரோடு ஷோ சென்றபடி வாக்கு சேகரித்தார்.