அம்பாசமுத்திரம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் வேகம்: இன்று மேலும் 3 பேர் போட்டியில்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 30ஆம் தேதி இத்தொகுதியில் போட்டியிட இருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், தொடர் விடுமுறைக்கு பின் மீண்டும் வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, இன்று மேலும் மூவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சி சார்பில் திருவிருத்தான் புள்ளியை சேர்ந்த செல்வகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல், சுயேட்சை வேட்பாளர்களாக அம்பாசமுத்திரம் முடப்பாடத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த ஆனந்த் ராஜ் ஆகியோர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியான ஆயுஸ் குப்தாவிடம் இன்று தங்களது வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.
இதன் மூலம் அம்பாசமுத்திரம் தொகுதியில் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. தேர்தல் தேதிகள் நெருங்கி வரும் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் பலர் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






