திருப்பூர் மாநகரத்தில் அரசு பேருந்துகளின் அதிவேக இயக்கம் – பொதுமக்கள் அச்சம்
திருப்பூர், மார்ச் 13:
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் இயக்கப்படும் சில அரசு பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதுடன், மிகுந்த சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பான்களை (ஹார்ன்) பயன்படுத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக பெருமாநல்லூர் – திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் சில அரசு பேருந்துகள் மாநகரப் பகுதிக்குள் கூட அதிக வேகத்தில் இயக்கப்படுவதாகவும், தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பும் ஹார்ன்களை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலைப் பயணிகள் இடையே அச்சம் நிலவுகிறது.
மாநகரப் பகுதிகளில் வாகனங்களுக்கு வேக வரம்பு விதிகள் இருந்தும், சில பேருந்து ஓட்டுநர்கள் அவற்றை முறையாக கடைப்பிடிக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் கூட அதிக சத்தத்துடன் ஹார்ன் அடிப்பதும், வேகமாக பேருந்துகளை இயக்குவதும் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
எனவே திருப்பூர் மாநகரப் பகுதிக்குள் அரசு பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை கடைப்பிடிக்கவும், தேவையற்ற ஹார்ன் ஒலியை தவிர்க்கவும் போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் செய்தியாளர்:
கி. முத்துக்குமார்






