அங்கன்வாடி ஆசிரியை முனியம்மாள்: மறைந்த பின்னும் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்த உன்னத தியாகம்

அங்கன்வாடி ஆசிரியை முனியம்மாள்: மறைந்த பின்னும் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு மறுவாழ்வு அளித்த உன்னத தியாகம்

திருநெல்வேலி, மார்ச் 9:
“ஆசிரியப்பணி அறப்பணி” என்ற சொல்லுக்கு உயிரூட்டும் வகையில், வாழ்நாள் முழுவதும் குழந்தைகளுக்கு கல்வி போதித்து வந்த அங்கன்வாடி ஆசிரியை ஒருவர், தனது மறைவிற்குப் பின்னரும் பலருக்கு மறுவாழ்வு அளித்து மனிதாபிமானத்தின் உன்னதத்தை வெளிப்படுத்திய சம்பவம் திருநெல்வேலியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள இடைக்கால் பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியை திருமதி ஆர். முனியம்மாள் (49) கடந்த 7-ம் தேதி மாலை சுமார் 3 மணியளவில் அம்பாசமுத்திரத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அம்பாசமுத்திரம் அரசு கலைக் கல்லூரி அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் 8-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவரது மூளைச் செயல்பாடு முற்றிலும் நின்றுவிட்டதாக (மூளைச்சாவு) மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த வேதனையான சூழலிலும், முனியம்மாள் அவர்களின் குடும்பத்தினர் உயர்ந்த மனிதாபிமான முடிவை எடுத்தனர். பிறர் வாழ்வை காப்பாற்றும் நோக்கில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவர்கள் முன்வந்தனர்.
இதன் அடிப்படையில், இன்று (மார்ச் 9) மருத்துவர்களின் குழுவினால் முனியம்மாள் அவர்களின்
கல்லீரல்
இரண்டு சிறுநீரகங்கள்
இரண்டு கருவிழிகள்
தோல்
ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த உறுப்புகள் மாற்று சிகிச்சைக்காக காத்திருந்த பல நோயாளிகளுக்கு புதிய வாழ்வை வழங்கியுள்ளன.
அனைத்து மருத்துவ நடைமுறைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் முனியம்மாள் அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு ஆசிரியையாக பல குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைத்த முனியம்மாள், தனது மறைவிற்குப் பின்னரும் பல உயிர்களுக்கு வாழ்வளித்து மனிதாபிமானத்தின் ஒளியாக நினைவில் நிலைத்துள்ளார்.
நிழல் மறைந்தாலும், அவர் தந்த ஒளி பலரது வாழ்வில் என்றும் நிலைத்திருக்கும்.