பாஜவுக்கு ஆர்எஸ்எஸ் ஆர்டர் மூத்த தலைவர்களுக்கு ‘கல்தா’

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜ இளையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வியூகத்தை வகுத்துள்ளது. இத்தேர்தலில் அதிகப்படியான புதிய மற்றும் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இளைய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ‘யுவ சக்தி’ மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை விட, தொகுதிப் பொறுப்பாளர்களாக இருந்து இளைய வேட்பாளர்களை வழிநடத்தப் பணிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதும் புதிய மற்றும் களப்பணியில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களை முன்னிறுத்துவதையே தனது நீண்டகாலக் கொள்கையாகக் கொண்டுள்ளது. டெல்லி போன்ற மாநிலத் தேர்தல்களில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்ததைப் போலவே தமிழகத்திலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பாஜ யுவ மோர்ச்சா மூலம் மாநிலம் முழுவதும் இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் மாதிரி சட்டமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகளை பாஜ மேற்கொண்டு வருகிறது.

தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதில் இளையவர்களுக்கும், தேர்தல் வியூகம் மற்றும் பிரசாரப் பணிகளில் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே பாஜவின் தற்போதைய திட்டம். தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக அவர் நாகர்கோவில் அல்லது பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என்று பேசப்பட்டு வந்தது.