பிறை தெரிந்தது.. தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு.. அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. இந்நிலையில் தான் இன்று பிறை தென்பட்டதால் நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு (Ramadan Fasting) தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ரம்ஜான் நோன்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை பிறை பார்த்து பின்பற்றப்பட்டு வருகிறது. முதலில் ரமலான் மாதத்துக்கான பிறை தெரிந்தவுடன் ரமலான் நோன்பு தொடங்கும்.
பிறை தெரிந்தது
அதன்படி நேற்று சவுதி அரேபியாவில் ரமலான் நோன்பிற்கான பிறை தெரிந்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் பிறை தெரிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் ரமலான் மாதத்துக்கான பிறை இன்று மாலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிந்தது. இதையடுத்து ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

நோன்பு தொடக்கம்
இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும். இன்று (புதன்கிழமை. 18-02-2026) மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்திற்கான முதல் பிறை தென்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை 19-02-2022) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என் பி உஸ்மான் முஹியித்தின் பாகவி மழஹிரி காஸிமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று முதல் தொழுகை இன்றிரவு முதல் பள்ளி வாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளும், அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளை பெற வேண்டுகிறோம். அனைவருக்கும் எங்களது கனிவான ரமலான் முபாரக் நல்வாழ்த்துகள்” என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவிலும் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. கர்நாடகா மாநில பிறை பார்வை குழுவின் ஒருங்கிணைப்பாளரான மவுலானா மக்சூத் இம்ரான் ரஷாதி இதனை உறுதி செய்தார்.

நோன்பு எப்படி இருப்பார்கள்?
அதன்படி நாளை முதல் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்க உள்ளனர். இந்த காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் நாள் முழுவதும் அவர்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் வரை அவர்கள் உணவு எடுத்து கொள்வது இல்லை. சூரிய உதயத்துக்கு முந்தைய காலை நேரத்தில் இஸ்லாமியர்கள் உண்ணும் உணவு சுகூர் எனவும், சூரிய அஸ்தமனத்துக்கு பிறகான மாலை நேர நோன்பு முடிக்கும் உணவுக்கு இஃப்தார் என்றும் பெயர்.

ரம்ஜான் எப்போது?
நோன்பு காலம் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். இந்த நோன்பு காலம் முடிவடைந்த பிறகு இஸ்லாமியர்கள் மீண்டும் பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த ரம்ஜான் பண்டிகை என்பது அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் இருக்காது. பிறை தெரிவதன் அடிப்படையில் ஒருநாள் முன்பு அல்லது ஒருநாள் பின்பு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
மோடி போட்ட பதிவு 
ரமலான் நோன்பு தொடங்கியதை தொடர்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று முக்கிய பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‛‛ரம்ஜான் முபாரக்! இந்த புனிதமான மாதம் நம் சமுதாயத்தில் ஒற்றுமையின் உணர்வை இன்னும் கூடுதலாக அதிகரிக்கட்டும். அனைத்து இடங்களிலும் அமைதி மற்றும் செழிப்பு நிறையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.