தவக்காலத்தின் ஆரம்பநாள்: திருநீற்றுப் புதன்!

`தவக்காலத்தின் ஆரம்பநாள்: திருநீற்றுப் புதன்!’

18.02.2026

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் இன்று (18.02.2026) திருநீற்றுப் புதன் வழிபாடுகளில் பங்கு கொள்கிறார்கள்.
இன்றைய திருநீற்றுப் புதனின் தொடக்கத்துடன் தவக்காலம் 40 நாட்கள் தொடர்கின்றது.
தன் பணி வாழ்வின் தொடக்கமாக 40 நாட்களை இயேசு நோன்பிலும், செபத்திலும் செலவழித்ததுபோல, நமது வாழ்வின் மனமாற்றத்தின் தொடக்கமாக, திருநீற்றுப் புதன் தொடங்கி 40 நாட்கள் செபத்திலும், தன்மறுப்பிலும், பிறரன்புச் செயல்களிலும் நம்மையே ஈடுபடுத்திக் கொள்கிறோம்.
கடந்த ஆண்டின் குருத்தோலை தினத்தன்று பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகள், ஒலிவக்கிளைகளை எரித்து, சாம்பலாக்கி, இந்த ஆண்டு சாம்பல் புதனன்று குருவானவர் விசுவாசிகள் நெற்றியில் “மனிதா நீ மண்ணாக இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய்;” என்று சொல்லி சிலுவை அடையாளம் வரைகிறார்.
தவக்காலம் கடவுளோடும் மனிதர்களோடும் ஒப்புரவாகும் காலமாக திகழ வேண்டுமென்று திருச்சபை நம்மை அழைக்கின்றது.
தவக்காலமானது உலகுக்கு எல்லாம் கருணையின் காலமாக, இரக்கத்தின் காலமாக, மன்னிப்பின் காலமாக, மனம் திரும்பும் காலமாக, நம்மை நாமே அறிந்து நம்முடைய தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை இறைவனின் வழியில் கொண்டு சேர்க்கவும், கடவுளோடும் மனிதர்களோடும் ஒப்புரவாகும் காலமாகவும் திகழ வேண்டுமென்று திருச்சபை நம்மை அழைக்கின்றது.
தவக்காலம் நமது இயலாமைகளை, பாவங்களை, பிழைகளை கண்டறியும் காலம். நமது பலவீனங்களை இறைவனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.
அன்றாடம் காலையில் எழுந்து, உண்டு, உழைத்து, களைப்பேறி, உறங்கும் வரை நாம் பிறரன்போடு வாழ்கின்றோமா அல்லது தன்னலம் கொண்டவர்களாகத் திகழ்கிறோமா என்பதை; உள்ளத்தின் ஆழத்திலே சீர்தூக்கிப் பார்க்க நம்மை அழைக்கிறது இந்த தவக்காலம்.
திமிர்பிடித்த மனமும், தீராப்பகையும், கொடுமைகள் புரியும் குணமும், கெடுமதி கொண்ட உறவுகளும், சுயநலப்பேயும், சூதுவாது நிறைந்த பேராசைகளும், உலகியல் பற்றுக்களும், புலன் இன்பங்களும், போலிப் புகழ்தேடும் வாழ்க்கையும், மனித நேயத்திற்கு எதிரான செயல்கள் அனைத்தையும் கண்டுணரவும் அவற்றைக் களையவும் நம்மை தயாரிப்பது தான் இந்த தவக்காலம்.
இதனையே தூய பவுல் அடிகளாரும், “கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகின்றோம். இதுவே தகுந்த காலம். இதுவே எமது மீட்பின் நாள்” என்று கூறுகின்றார். கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பை, நமது அகத்தின் மாற்றங்களால் வெளிப்படுத்தவேண்டும். வெளிவேடத்தை இறைவன் என்றுமே விரும்புவதில்லை. உள்ளங்களைச் சீர்தூக்கி ஆராயும் கடவுள், உண்மையான மனமாற்றத்தைத்தான் நம்மில் விரும்புகின்றார். இதனாலேயே, “உடைகளைக் கிழிக்காதீர்கள். உங்கள் உள்ளங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்கிறது இறைவார்த்தை..
எனவே தான், “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளி வேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாது இருக்கட்டும்” என்று உரைக்கின்றார் இயேசு.

இன்றைய நவீன காலத்தில் ஆடம்பர அணிகலன்கள், விருந்துபசரிப்புக்கள், கேளிக்கை, பொழுதுபோக்கு இவற்றை ஒதுக்கி அதன் மூலம் சேமிக்கும் பணத்தை அல்லலுறும்; உறவுகளுக்கு வழங்கலாம்.
தவத்தின் அடையாளமாக ஆடம்பரங்களைக் குறைத்து, உணவிலும் பிறவற்றிலும் எளிமை, செபதியானத்தோடு இரக்கம் சார்ந்த தான தர்மம், குடும்ப செபமாலை, திருச்சிலுவைப் பாதை, ஒறுத்தல் முயற்சிகளின் மூலம் இறைவன் விரும்பும் மனமாற்றத்திலும் நற்பண்புகளிலும் நாம் நம் வாழ்க்கைத் தடத்தில் மனதிருத்த முயற்சிப்போம்
நமது உண்மையான நிலையை, வாழ்க்கையை நாம் உணர்வதற்கு இறைவன் மீண்டும் ஒரு தவக்காலத்தை நமக்கு கொடையாகத் தந்துள்ளார். மனிதன் முகத்தைப் பார்க்கிறான், ஆண்டவரோ அகத்தைப் பார்க்கிறார். வேரோட்டமான மனமாற்றத்தை விரும்புகிறவர்கள் கடவுளுக்கு விலையேறப் பெற்றவர்கள். அவருக்கு முற்றிலும் சொந்தமானவர்கள்.
இயேசுவின் திருப்பாடுகளிலும் மீட்பு தரும் அவரது மரணத்திலும் பங்கு பெறுவோம். அவரோடு இறந்தோமானால் அவரோடு உயிர்ப்போம் என்ற நம்பிக்கையில் தவக் காலத்தை தொடங்கி, அவரது அருள் ஆசியோடு நிறைவு செய்வோம்.
இறைவனின் அருளைப் பெற விழையும் நாம், நம்மையே தாழ்மை நிலைக்குத் தள்ளி, இறை விருப்பத்திலே உயிர்த்து, புனித வாழ்வை அணைத்துக் கொள்வோம்.