கூட்டணியில சலசலப்பு ஏற்படுத்தி, வலதுசாரிக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க… ஆட்சி அதிகாரம் கேட்டு விசிக அழுத்தம் தரல: திருமாவளவன் பளீச்

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு மக்களின் நன்மதிப்பை பெறும் வகையில், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி வழங்கியது திமுக அரசு. ஆனால் நிதி தராமல், பாஜ அரசு மற்றும் அதன் தலைவர்கள் பல்வேறு நெருக்கடிகளை தந்தனர். ஆளுநர் சட்டமன்ற வரம்பை மீறி செயல்பட்டதை நாடு அறியும். நெருக்கடிகளை தாக்குப்பிடித்து, திமுக அரசு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. பாஜ அரசு தமிழ்நாடு அரசுக்கு, தந்திருக்கும் நிதி நெருக்கடியை, தமிழ்நாடு மக்கள் அறிந்து உணர்ந்து இருக்கிறார்கள்.

மீண்டும் திமுக அரசு அமையும் வகையில், இந்த தேர்தலில் மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். சட்டப்பூர்வமான தடை ஏற்படாத வண்ணம், அந்த சதியை முறியடிக்கும் வண்ணம், முதலமைச்சர் ரூ.5,000 வழங்கியுள்ளார். பாஜவினர் தங்களுடைய வயிற்றெரிச்சலில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விமர்சிக்கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும், அதற்கான நோக்கம் இருக்கிறது. கோரிக்கை வைப்பது இயல்பானது. விசிக தொடங்கப்பட்டதிலிருந்து, ஆட்சி அதிகாரம் என்பது, எங்களது கோரிக்கை. ஆட்சி அதிகாரத்தை சாத்தியப்படுத்துவதற்கான சூழல் இருக்கிறதா என்றால் அனுபவப்பூர்வமாக, இப்போது இல்லை என உணர்ந்திருக்கிறோம்.

கூட்டணிகளில் சலசலப்பு ஏற்படுத்தி, வலதுசாரிக்கு வாய்ப்பு உருவாக்கக்கூடாது. விசிக ஆட்சி அதிகார கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால் அதை கைவிடவும் இல்லை. ஆட்சியில் அதிகாரம் கேட்பதற்கு, காங்கிரசுக்கு உரிமை இருக்கிறது. இதன் மூலம் காங்கிரஸ், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிரணியினர் நம்புகிறார்கள். திமுக -காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும். இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக தீர்வு காண்பார்கள். காங்கிரஸ் தேசிய தலைமை தான் இறுதி முடிவு செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டு காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர்கள், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது முடிவு அல்ல. திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜ மத்தியில் ஆளும் கட்சி என்பதால் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்கலாம். ஆனால் யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கிறார்கள். பாஜ என்ன சூழ்ச்சி செய்து, சதி திட்டங்கள் தீட்டினாலும், தமிழ்நாட்டில் பாஜ வெல்ல முடியாது. தமிழ்நாடு வேறுபட்ட மண் என்பதை, மீண்டும் பாஜவினர் உணருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.