ஈரோடு: ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது, சுவரொட்டிகள் ஒட்டுவதில் இரண்டு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தற்போது, மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் உள்ளார். இவரது தலைமையை ஏற்க மறுத்து ஏற்கனவே சூரியம்பாளையம் பகுதி செயலாளரும், முன்னாள் துணை மேயரான பழனிசாமி தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
இவருக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் நகர் பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல தலைவருமான மனோகரன் உட்பட சில பகுதி செயலாளர்கள் செயல்பட்டு வந்தனர். இதனால், மாநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் ஏற்பட்டது. இதனை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் நினைவு நாள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் தனித்தனி அணியாக வந்து மாலை அணிவித்தனர். இதற்கிடையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி, ஈரோடு மாநகர் மாவட்டத்திலும் யார்? வேட்பாளராக போட்டியிடுவது என்ற போட்டி நிலவுகிறது.
இதற்காக, அதிமுகவினர் ஒருவருக்கொருவர் தங்களது செல்வாக்கினை தனித்தனியே காட்டி வருகின்றனர். ஏற்கனவே, ஈரோடு கிழக்கு தொகுதியை குறி வைத்து தேர்தலில் போட்டியிட மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், அவரது மகனான மாணவரணி அணி செயலாளர் ரத்தன் பிரித்திவி, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, மேயர் மல்லிகா, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, பகுதி செயலாளர் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் வீரக்குமார் உட்பட 10க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும், கட்சியினர் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னாள் அமைச்சரின் மகனான மாணவரணி செயலாளர் ரத்தன் பிரித்திவி பொங்கல் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை மாநகர் முழுவதும் ஒட்டியிருந்தார். இதற்கு போட்டியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்த பகுதி செயலாளர் மனோகரன், ரத்தன் பிரித்திவி எங்கெல்லாம் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தாரோ, அந்த சுவரொட்டியின் மீது அதிமுக தேர்தல் வாக்குறுதி வாசகம் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
குறிப்பாக, அதிமுக மாநகர் மாவட்ட கட்சி அலுவலகம் முன்பே சுரொட்டிகள் மறைத்து, ஒட்டப்பட்டுள்ளது. உட்கட்சி விவகாரத்தை போஸ்டர் போட்டு விளம்பரப்படுத்தலாமா என்று அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.






