குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அம்பை எம்.எல்.ஏ.

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் – சேதமான சாலை, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் சாலை மறியலில் ஈடுபட முயன்ற அம்பை எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகர் பகுதி வழியாக களக்காடு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பள்ளங்கள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் மூலமாக களக்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் தோண்டப்படும் பள்ளங்கள் சரியாக மூடாததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளங்கள் தோண்டப்படுவதால் சேரன்மாதேவி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய குழாய்களிலும் உடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சேரன்மகாதேவி பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியினர் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா சேரன்மாதேவி பகுதி மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றார்.

 

அப்போது சேரன்மாதேவி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள் வருகிற 15ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து விடும் என எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து உத்திரவாதம் அளித்தனர். அதன் பேரில் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர்.