இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; சென்னையில் 2வது நாளாக நீடிப்பு

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இரண்டாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தொடக்கக் கல்வித் துறையில், 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், தி.மு.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் , குண்டுகட்டாக கைது செய்தனர்.

இதற்கிடையில், இடைநிலை ஆசிரியர்களை பேச்சுக்கு அழைத்தது, பள்ளிக்கல்வித் துறை. அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், இரண்டாவது நாளாக, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் முற்றுகையிட்டு, நேற்றும் போராட்டம் நடத்தினர். அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து கோஷம் எழுப்பினர் . அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். குழந்தைகள், தங்கள் பெற்றோரை இறுக பற்றிக் கொண்டு கதறி அழுதனர்.

இந்த கைது நடவடிக்கை யின்போது, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் ராபர்ட் உட்பட சில ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கு கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை அரசு பஸ்களில் ஏற்றிய போலீசார், நேற்று முன்தினம் போல சென்னையை வலம் வந்தனர். பொறுமையை இழந்த ஆசிரியர்கள், பஸ்சில் இருந்து கீழே இறங்கி, கோயம்பேடு 100 அடி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் அனைவரும் திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.

அடக்குமுறையின் உச்சம்

தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி நடவடிக்கை மேற்கொள்ளாமல், இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வது, அடக்குமுறையின் உச்சம். முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தலையிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். – பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.