சேரன்மாதேவியில் சீரான தண்ணீர் வழங்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சேரன்மாதேவி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக, குழி தோண்டப்பட்டு இராட்சத குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அவ்வப்போது சேரன்மாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் குழாய்கள் உடைந்து விடுவதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேரன்மாதேவி பேரூராட்சி 12-வது வார்டு காயிதே மில்லத் தெரு பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக தண்ணீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சேரன்மாதேவி – அம்பை சாலையில் காலி குடங்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சேரன்மாதேவி பேரூராட்சி செயல் அலுவலர் காதர் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தருவதாக கூறிய பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது






