அரசு பேருந்தில் பின்பக்க ஏணியில் தொங்கி செல்லும் மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

காட்டுமன்னார்கோவில் அருகே அரசு பேருந்தில் உள்ளே இடம் இல்லாததால் பேருந்தில் பின்பக்க ஏணியில் தொங்கி செல்லும் மாணவர்கள்

வெளியான வீடியோவால் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே காட்டுமன்னார்கோவில் இருந்து முகையூர் வழியாக சிதம்பரத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் உள்ளே பள்ளி மாணவர்கள், பயணிகள் என அதிக அளவில் நெருக்கியடித்துக் கொண்டு சென்றனர். பலர் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்ற நிலையில், அரசு பேருந்தின் பின்னால் ஏணிப்படியில், பேருந்து உள்ளே இடம் இல்லாமல் பள்ளி மாணவர்கள் உயிர் ஆபத்தை மறந்து நின்று கொண்டே சென்றது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்தது .பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருமே பலமுறை கோரிக்கை வைத்து பள்ளி மாணவர்களுக்கான அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலும், அரசின் அதிகாரிகள் அரசு பேருந்துகளை இயக்காமல் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதே வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடைபெற்று வருவதாக பேருந்து பயணிகளும், பொதுமக்களும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். பேருந்தின் ஏணிப்படியில் தொங்கிச்செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமாக அது இருக்கும் எனவும் அரசின் அதிகாரிகள் இனிமேலும் தயங்காமல் மாணவர்கள் நலனிலும் அவர்களின் உயிர் மீதும் அக்கறை கொண்டு கூடுதல் அரசு பேருந்துகளை பள்ளி மாணவர்களுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.