திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மீதான புகார் காரணமாக, அவர் தலைமையில் நடக்கவிருந்த முப்பெரும் விழாவை, துணை முதல்வர் உதயநிதி தவிர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்படத் தொழிலாளர்களுக்கு, கடந்த 2010ல், செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரில், 90 ஏக்கர் நிலத்தை, அரசு குத்தகைக்கு வழங்கியது. அதற்கு ‘திரைப்பட நகர்’ எனப் பெயர் சூட்டப்பட்டது.
அதில், தயாரிப்பாளர்களுக்கு 10 ஏக்கர்; ‘பெப்சி’ அமைப்பான தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 50 ஏக்கர்; சின்னத்திரை கலைஞர்களுக்கு 7 ஏக்கர்; தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 8 ஏக்கர் என ஒதுக்கப்பட்டது.
அந்தந்த சங்கத்தினர், வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், வீடு கட்டி தருவதாகக் கூறி, ‘பெப்சி’ அமைப்பின் சார்பில், பணம் வசூலிக்கப்பட்டது; அப்படி வசூலிக்கக் கூடாது என, வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பையனுார் நிலத்தில், படப் பிடிப்பு தளம் கட்டி, அதில் கிடைத்த வருமானத்தை, ‘பெப்சி’ நிர்வாகம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருகிறது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக, சென்னை மண்டல வீட்டுவசதி வாரியத்திற்கு கிடைத்த புகாரையடுத்து, அது பற்றி விசாரிக்க, கூட்டுறவு சார் – பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ‘பெப்சி’ தலைவரான இயக்குநர் செல்வமணி தலைமையில், ‘ஒருமைப்பாடு தினம், கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும், செவாலியே விருது பெற்ற தோட்டா தரணிக்கும் பாராட்டு’ என, முப்பெரும் விழா, சென்னையில், கமலா தியேட்டரில், இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விழாவில், சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்க இருந்தார். இதையடுத்து, செல்வமணி தரப்பினர் மீதான புகார் குறித்து, உளவுத்துறை வாயிலாக, உதயநிதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விழாவிற்கு வருவதை, உதயநிதி தவிர்த்ததாகவும், இதனால் இன்று நடக்கவிருந்த முப்பெரும் விழா தள்ளி வைக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.






