வீரவநல்லூரில் மக்கள் தொடர்பு முகாம்,
ரூ.43.37 லட்சம் நல உதவிகள் அளிப்பு!

சேரன்மகாதேவி, ஆக.22. திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ரூ.43.37 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக சேரன்மகாதேவி வட்டத்தில் மேலச்செவலில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அடிப்படை வசதிகள், மாணவர்களின் கல்வித் தரம், மதிய உணவு சமையல் செய்யும் அறை ஆகியவற்றை ஆய்வுசெய்தார். தொடர்ந்து கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து வடக்கு வீரவநல்லூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 353 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள், முதியோர்உதவித் தொகை, உழவர் அட்டை, வேளாண்துறை மூலம் திட்டங்கள் உள்பட ரூ.43.37 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1112 மனுக்கள் பெறப்பட்டது. இதில், 400 மனுக்கள் ஏற்கப்பட்டது. 712 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், மகளிர் திட்ட உதவி இயக்குநர் இலக்குவன், வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், தனித் துணை ஆட்சியர் ஜெயா, துணை ஆட்சியர் ( பயிற்சி) தே.ஜெ.பி. கிரேசியா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வில்லியம் ஏசுதாஸ், வட்டாட்சியர் வின்சென்ட், பேரூராட்சித் தலைவி சு. சித்ராசுப்பிரமணியன், துணைத் தலைவர் வசந்த சந்திரா, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






