திருநெல்வேலிமாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் அருணாசலம் (எ) குமார் பாண்டியன் 48, அ.தி.மு.க.,வில் மாவட்ட பிரதிநிதியாகவும், அவரது மனைவி கீதா, அப்போது சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத் தலைவியாகவும் இருந்தனர்.2013 ல் பொறியாளர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து, இரு தரப்பி னருக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
அதே ஆண்டின் ஆக. 22 ல் குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில், ஆறுமுக நயினார் மற்றும் ஆறுமுகதாஸ் விசாரணை நடந்த போதே இறந்தனர். விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார்.
இதில், சங்கர் 46, அருணாச்சலம் 42, முருகன் 44, லட்சுமணன் 44, ராஜேஷ் 37 ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வந்த் அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் சேரன்மகாதேவி காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கருணாநிதி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரணதண்டனையும், 71 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள்22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டில் மட்டும் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 25 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் கொலை வழக்கில் 22 நபர்களுக்கும்,கொலை முயற்சி வழக்கில் 2 நபர்களுக்கும், போக்சோ வழக்கில் 1 நபருக்கும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில்தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.






