கரூர் மனிதப் பேரவலத்தின் பின்னணியில் சதிச்செயல் உள்ளது என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அவர்கள் சொல்வதில் நான் உடன்படுகிறேன்!
அத்தகைய சதிச் செயல்கள்:
1.தவெக நிர்வாகிகள் கரூர் காவல்துறையினரிடம் விஜய் பரப்புரை செய்வதற்கு 27.09.2025, அன்று மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரை அனுமதி கேட்டு, அனுமதியும் பெற்றுக்கொண்டனர். ஆனால் தவெக-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடிகர் விஜய் அவர்கள் 27.09.2025,அன்று மதியம் 12 மணிக்கு பேசுவார் என்று அறிவிப்புச் செய்து மக்களை காலை10 மணியியிலிருந்தே காத்திருக்க வைத்தனர். இது தெரிந்தே செய்த “சதி” என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
2.காவல்துறையிடம் அனுமதி பெறும்போது 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று தவெக-வினர் எழுதி கொடுத்துள்ளனர். ஆனால் விஜய்-க்காக கரூர் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோரை திட்டமிட்டு திரட்டி கொண்டுவரப்பட்டனர். இதுவும் “திட்டமிட்டச் சதிதான்”.
இச்சதிச் செயல் தவெக தலைமை நிர்வாகிகளின் வழிகாட்டுதல்படி நடந்தாக கூறப்படுகிறது!
கரூரில் மட்டுமல்ல அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தி கைக்கொள்ளபட்டதாகவும் கூறப்படுகிறது!
3. நாமக்கலிலிருந்து கரூர் வருவதற்கு சுமார் ஒரு மணிநேர பயணம்தான். கூடுதலாக நேரம் எடுத்தது என்றால் 2 மணிநேரம் கூட எடுக்கட்டும். ஆனால் திட்டமிட்டு 7 மணி நேரத்திற்கு மேலாக தாமதித்து மிகவும் மெதுவாகப் பயணித்து வரும் வழியெல்லாம் அனுமதியின்றி “ரோடுஷோ” நடத்தியதோடு, தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரும்வரை தாமதித்து செல்ல வேண்டும் என்று “திட்டமிட்ட தாமதம்” செய்யப்பட்டது. அத்தகைய தாமதம் என்பது மிக முக்கியமான “சதிச் செயலாகும்”.
இந்தத் தாமதம்தான் 41 உயிர்கள் பறிபோக அடிப்படை காரணமாக அமைந்தது.
4.கரூரில் நுழைந்த பிறகு போலீசார் அனுமதித்த வழியை விடுத்து மாற்று வழியில் சென்று 500 மீட்டர் தூரத்தை 1 மணிநேரம் பயணித்து மக்களின் ஆவலை விஜய் தூண்டினார். தன்னை காண மக்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டதை தனது குரூர புன்னகையை சிந்தி ரசித்தார்.ஆகவே, இதுவும் விஜய் செய்த “திட்டமிட்ட சதிதான்”.
5. மக்கள் நெருக்கடி காரணமாக விஜய் பேச திட்டமிடப்பட்ட கரூர் வேலுச்சாமிபுரத்தை சென்று சேர்வது மிகுந்த சிக்கலையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவ்விடத்திற்கு 500 மீட்டர் தூரத்திற்கு முன்பே விஜய் வந்த சொகுசு பேருந்தினை நிறுத்தி அங்கிருந்தே விஜய் அவர்களை பேச வைக்க போலீசார் முயற்சி எடுத்து தவெக நிர்வாகிகளை கேட்டுக்கொண்டபோதும் அதனை மறுத்த அவர்கள் விஜய் பேச நிர்ணயித்த இடத்திற்குத்தான் செல்வோம் என்று அடம்பிடித்து, ஏற்கனவே பெருமளவு மக்கள் கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு தனது வாகனத்தோடு பின்தொடர்ந்து வந்த ஆயிரக்கணக்கான நபர்களையும், அவர்களது வாகனங்களையும் கொண்டு சென்று மிகப்பெரும் இட நெருக்கடியை ஏற்படுத்தினர்.“மக்கள் விஜயை காண்பதற்கு மிகப் பெருந்திரளாக திரண்டனர்” என்று காட்டுவதற்கான நோக்கத்தில் செய்த இதுவும் ஒரு “சதிச் செயல்தான்”.
போலீசார் சொன்ன 500 மீட்டருக்கு முன்பான அந்த இடம் மூன்று சாலைகள் சந்திக்கும் அகலமான இடமாகும். அங்கு விஜய்யின் சொகுசு பேருந்தை நிறுத்தியிருந்தால் இடநெருக்கடி தவிர்க்கப்பட்டிருக்கும்.ஆனால் மக்கள் கூட்டம் “விஜயை நோக்கி அலைமோதுகிறது” என்ற தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தவெக நிர்வாகிகள் பேருந்தே செல்ல இயலாத நிலையிலும் அங்குதான் பேருந்தை கொண்டுசெல்வோம் என்று அடம்பிடித்து அந்த “சதிச்செயலை” செய்தனர்.
6. எல்லா அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், பரப்புரை பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது காவல்துறையின் வழக்கமான நடைமுறை ஆகும், கடமையுமாகும். ஆனால் தவெக தலைவர் விஜய் அவர்கள் “போலீசார் திட்டமிட்டு அத்தகைய கட்டுப்பாடுகளை தங்கள் கட்சிக்கு மட்டும்தான் விதிக்கிறார்கள்” என்பதைப் போன்ற ஒரு தவறான எண்ணத்தை தனது பேச்சின் மூலம் தனது தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தினார். இத்தகைய அவரது பேச்சு அவரை கண்மூடித்தனமாக பின்பற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீற வேண்டும் என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியது. அந்த எண்ணம்தான் அங்கு ஒரு கட்டுப்பாடற்ற சூழல் உருவாக காரணமாக அமைந்தது. நிச்சயமாக இது விஜய் தெரிந்தே செய்த “சதிச் செயல்தான்”.
7. அதேபோன்று விஜய் பேசப் போகும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் விஜய் பேசும் நேரத்தில் மின்கம்பிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் மின்னிணைப்பை தடைசெய்திட வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.அத்தகைய கோரிக்கையை ஏற்று மின்தடை செய்யப்படும்போது, திரு.விஜய் அவர்கள் வேண்டுமென்றே அரசு அதிகாரிகள் தனது நிகழ்ச்சியில் மின்தடை ஏற்படுத்துகின்றனர் என்று தெரிந்தே திட்டமிட்டு தொடர்ந்து பொய் பேசி வந்தார்.இதுவும் நிச்சயமாக ஒரு “சதிச் செயல்தான்”.
8. விஜய்யின் சொகுசு பேருந்து கரூர் நகருக்குள் நுழைந்ததுமே விஜய் தான் வருகின்ற வழியில் தன்னை பார்க்க நிற்கும் கூட்டத்தை நோக்கி தன் முகத்தை காட்டியவாறும், கைகளை அசைத்தவாறும் வந்திருந்தால் அவரைப் பார்த்தவர்களில் பலர் அங்கிருந்து திரும்பிச் சென்றிருப்பார்கள். அவரைப் பார்க்க வேண்டும் என்று ஓரிடத்திற்கு வந்து குவிந்திருக்க மாட்டார்கள். ஆனால் தன்னை பார்க்க மக்கள் ஓரிடத்தில் வந்து குவியவேண்டும் என்ற நோக்கத்தோடு திடீரென்று பேருந்தின் உள்பகுதி லைட்டை அணைத்துவிட்டு, பேருந்தின் ஜன்னல் ஸ்க்ரீனை இழுத்து மூடிவிட்டு, ஷட்டரையும் கீழே இறக்கிவிட்டு தன்னை மறைத்துக்கொண்டு தன்னை காண வேண்டும் என்றால் தான் பேசப்போகும் இடத்திற்கு வந்தாக வேண்டும் என்ற நிலையை திரு. விஜய் அவர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தினார்கள். நிச்சயமாக இதுவும் விஜய் செய்த “சதிச்செயல்தான் “ என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
9. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று ஏராளமானோர் நீண்ட நேரமாக அதாவது, கிட்டதட்ட 7 மணிநேரம் தண்ணீர் இன்றி, உணவின்றி கடும் வெய்யிலில் நின்றபோதும், அவர்களுக்கு குடிக்க தண்ணீரோ, உண்ண குறைந்தபட்சம் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களோ தவெக நிர்வாகிகளால் வழங்கப்படவில்லை. விஜயை பார்க்க குழுமிருந்த மக்கள் நீரற்ற, சோறற்ற நிலையில் சோர்வுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். கண்டிக்கப்பாக இதுவும் “சதிச்செயல்தான்”.
10. விஜய் கரூரில் பேச ஆரம்பித்த உடனேயே இட நெருக்கடியால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் மயக்கமுற்றும், உயிரிழந்த நிலையிலும் அவர்களை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லும்போது அந்த ஆம்புலன்சுகள் வேண்டுமென்றே தங்கள் கூட்டத்தை இடையூறு செய்யும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ளது என்ற தவறான புரிதலில் தவெக-வினர் அம்புலன்சை செல்ல விடாமல் தடுத்து ஆம்புலன்சையும், ஆம்புலன்சு ஓட்டுனரையும் தாக்கினார்கள். இதனாலும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணத்தாலும் இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிச்சயமாக இதுவும் ஒரு முக்கியமான “சதிச்செயல்தான்“.
இந்த நிலையும் விஜய் அவர்களால் தனது முந்தைய பேச்சுக்களால் தனது ரசிகர்கள் மத்தியில் உருவாகப்பட்ட தவறான எண்ணத்தினால் ஏற்பட்ட விளைவுதான்!
11. தன்னைக் காண வந்தவர்கள் செத்துமடிந்து விட்டார்கள் என்று தெரிந்தும் அவர்களை பார்க்க கூட முன்வராமல், தன் கட்சிக்காரர்களை அனுப்பி உதவிட முன்வராமல், ஏன் உடனடியாக ஒரு இரங்கலைக் கூட தெரிவிக்காமல் கரூரிலிருந்து சென்னைக்கு ஓடிவந்து ஒளிந்து கொண்ட செயலை “சதி” என்று அழைக்காமல் எப்படி அழைப்பது!
12. எல்லாவற்றுக்கும் மேலாக முழுக்க முழுக்க தனது கவனக்குறைவாலும், தனது கட்சிக்காரர்களின் அக்கறையற்ற செயலாலும் அரங்கேறிய இத்தகைய மனித கொடுந்துயரம் குறித்து கொஞ்சமும் மனவருத்தம் கொள்ளாமல் சங்கப் பரிவாரங்களின் துணையோடு அந்தப் பழியை மடைமாற்றம் செய்ய திரு.விஜய் அவர்கள் செய்யும் முயற்சி எவ்வளவு பெரிய சதி!
ஆகவேதான் சொல்கிறேன், கரூர் மனிதக் கொடுந்துயர் ஏற்பட்டதன் பின்னணியில் “சதிச் செயல்” இருக்கிறது என்ற தவெக தலைவர் நடிகர் விஜய் அவர்களின் கருத்தில் நான் உடன்படுகிறேன்!
இவண்
சா.ரஜினிகாந்த்,
துணைப் பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.






