திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் 14 பேரை கடித்த நாயின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் 40. இவரது வீட்டில் வளர்க்கும் நாய், தெருவில் சென்ற 13 பேரை கடித்தது. கிருஷ்ணனையும் கடித்து பதம் பார்த்தது. இதில் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் கடந்த மூன்று மாதங்களில் வெவ்வேறு நாய்கள் கடித்ததில் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே இது குறித்து விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், நாய் உரிமையாளர் கிருஷ்ணன் மீது விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விக்கிரமசிங்கபுரத்தில் செப். 24-ந்தேதி முதல் நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் என நகராட்சி தெரிவித்துள்ளது.






