இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல்!

திட்டக்குடி அருகே கழுதூரில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்து ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த புல்லூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிகண்டன் (வயது 25) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கழுதூர் பஸ் நிறுத்தம் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.அப்போது திருச்சி மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த வேன் மணிகண்டனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார் தகவலறிந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சாலையில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்,வட்டாட்சியர் உதயகுமார், வேப்பூர் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி,காவல் உதவி ஆய்வாளர் பாரதி மற்றும் போலீசார்
உடனே அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் போலிசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.அதனை தொடர்ந்து இறந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர்.