அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா படங்களாக எடுக்கப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் நரேந்திர மோடி, மன்மோகன் சிங், இந்திரா காந்தி, ஜெயலலிதா, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி போன்ற அரசியல் தலைவர்களின் வாழ்க்கை திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.
அந்த வகையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கையும் படமாக இருக்கிறது. “அய்யா” என தலைப்பில் உருவாகும் இப்படத்தை பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற உணர்வுகளை சுமக்கும் படங்களை தந்து கவனம் ஈர்த்த சேரன் இயக்குகிறார். பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தயாரிக்கிறார்.
இதில் டாக்டர் ராமதாஸ் ஆக பிரபல நடிகர் ஆரி நடிக்கிறார். இவர் நெடுஞ்சாலை, தரணி, மாயா, நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த புதிய படத்தில் டாக்டர் ராமதாஸின் இள வயது நிகழ்வுகள், அவரது அரசியல் வருகை, சமூக நீதிப் போராட்டங்கள் குறித்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன. படப்பிடிப்பு பணிகள் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இதையொட்டி டாக்டர் ராமதாஸின் பிறந்த நாளான நேற்று அய்யா படத்தின் போஸ்டர் வெளியானது.






