வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்

வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்பை – நெல்லை சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீரமநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மனைவி முத்துலட்சுமி. இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. தம்பதியின் மகனான சபரிகண்ணன் (15), வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மாணவனை பள்ளி ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறி, கடந்த 7-ம் தேதி காலை பள்ளிக்கு செல்லும் போது விஷம் அருந்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காலை வழிபாட்டின் போது மாணவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக மாணவரை மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சையாக கொண்டு சென்றனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் நெல்லை அம்பை பிரதான சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் அருகே மாணவரின் சடலம் கொண்டு வந்த வாகனத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாணவனின் இறப்பிற்கு காரணமான பள்ளி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .