முதல்வர் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுக கவுன்சிலர் கைது

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அன்பில் மகேஷ் கைதை தொடர்ந்து புழல் சிறை வாசலில் திமுகவினர் திரண்டு தமிழக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். வேலூர் காட்பாடியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் டீட்டா சரவணன், “தைரியமாக இருங்க தலைவரே.. நம்ம வெளியே வந்துவிடலாம். அவனை கரூரில் வைத்து அன்றைக்கே போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? தலைவரே என்றார். மேலும் கரூரில் வைத்து போட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? என முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

இது குறித்து டீட்டா சரவணன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரத்தில் மறைந்திருந்த திமுக கவுன்சிலர் சரவணனைக் காவல்துறையினர் கைது செய்தனர். நண்பர்களோடு பெங்களூரு செல்வது போல் போக்கு காட்டிவிட்டு, விழுப்புரம் சென்று பதுங்கியிருந்த டீட்டா சரவணனைக் காவல்துறையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.