தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்- தீவிர தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில், உடல்நிலை சரியில்லை என நாடகமாடி சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 26) இரவு, அந்த அறையில் இருந்த கைதி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகச் சிறைக் காவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறைக் காவலர்கள் அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த கைதிகள், காவலர்களைத் திடீரெனத் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு காவலர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள எல்லையில் தீவிர சோதனை

சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகள் கேரளாவுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம், தேக்கம்பட்டி சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிறை வளாகத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட போலீசாருடன் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரும் இணைந்து தப்பியோடிய 17 கைதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள்

தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடியதைத் தொடர்ந்து, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

தப்பிய 17 பேர் யார்?

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள் விவரம்:

  1. லிங்கம்
  2. ராஜா சிங்கந்தர்
  3. கருப்பசாமி
  4. சிலம்பரசன்
  5. திருப்பதி
  6. மஞ்சிசுந்தரம்
  7. சபரி
  8. பொன்முத்து
  9. நிஜந்த்
  10. கார்த்திக் ராஜா
  11. முகிலன்
  12. செல்வா
  13. தருண்
  14. ராஜ்குமார்
  15. பிரவீன்
  16. முத்து இளங்கோ
  17. ராஜூவின்