கோவையில் மாணவன் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை பீளமேடு பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெரும் பள்ளியில் படித்து வந்த மாணவன் அகிலன் சாதிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பேசியதால் மனம் உடைந்து தற்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சகமாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் முற்போக்கு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டம் 5-வது நாளாக தொடர்கிறது.
கோயில் இன்று பிற்பகல் முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. போராட்டக்காரர்கள் பலத்த மழையிலும் போராட்ட பந்தலை விட்டு கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களை கைது செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் காவல்துறையை கண்டித்து மழையில் நனைந்த படியே முழக்கங்கள் எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் , திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ் புலிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் இளவேனில் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், மாணவனின் பெற்றோருடன் மழையில் நனைந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.






