சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமிக்கு ‘பசுமைப் போராளி’ விருது

களத்தில் இறங்கி சுற்றுச்சூழல் பணியாற்றி வரும் விஞ்ஞானிக்கு வீடு தேடி சென்று பாராட்டு

ஆலங்குளம், அக். 6:

இந்தியாவின் சுற்றுச்சூழல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வரும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி முனைவர் விஜயலட்சுமிக்கு, அவரது சுற்றுச்சூழல் பணிகளைப் பாராட்டி ‘பசுமைப் போராளி’ விருது வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் மேலகரம் அருகே மின்நகரில் வசித்து வரும் முனைவர் விஜயலட்சுமி, சிறந்த ஆராய்ச்சியாளராக மட்டுமின்றி, தனது ஆய்வுகளையும் அதன் பயன்களையும் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் களப்பணியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

மண்புழு வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை, நீர்நிலைகள் பாதுகாப்பு, விவசாயம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். குளம், குட்டை, வரப்பு, வயல்வெளி, நீரோடைகள், ஆகாயத்தாமரை அகற்றுதல், உழவர் அங்காடி என சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை சார்ந்த பல்வேறு களங்களில் அவரது செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது.

80 வயதிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முனைவர் விஜயலட்சுமி, பல தலைமுறை மாணவ-மாணவியருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறார். அவரிடம் பயின்ற பலர் இன்று பல்வேறு உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது நீண்டகால சுற்றுச்சூழல் பணியைப் பாராட்டும் வகையில் ‘பசுமைப் போராளி’ விருது அவரது இல்லத்திற்கே சென்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதுபெரும் காந்தியச் செம்மல் செங்கோட்டை விவேகானந்தன், ‘ஹட்’ நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் ரெங்கநாதன், விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஞ்ஞானி விஜயலட்சுமியின் பணிகள் ஆய்வறைகளுக்குள் மட்டுப்படாமல், மக்களோடும் மண்ணோடும் இணைந்த களப்பணியாக அமைந்துள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கான பசுமையான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.