பாரதி – வ.உ.சி. குறித்து சிறப்புரைகள்; நல்நூலகருக்கு “நூலகச் செம்மல்” விருது
அம்பை, அக்.5:
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் மாதாந்திர கூட்டம் அம்பையில் பேரவைத் தலைவர் நீ. அய்யப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அம்பை வாரியார் அறக்கட்டளை சார்பில் சோம. மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் புஷ்பம் தமிழ் வாழ்த்துப் பாடலை பாடினார். பேரவைப் பொருளாளர் அரிமா பாரதி கண்ணன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பேரவைச் செயலர் ஐ. லெட்சுமணன், கடந்த கூட்டத்தின் அறிக்கையை வாசித்தார்.
சிந்தனைத் துளிகளில் வ.உ.சி.
கூட்டத்தில் சங்கரன் குறட் சிந்தனை வழங்கினார். “சிந்தனைத் துளிகள்” நிகழ்வில் சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனார் குறித்து கீதா ஆறுமுகம் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், இலக்கியம், தமிழ் மொழி, சமூகப் பணிகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
“நூலகச் செம்மல்” விருது
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, சிறப்பாக நூலகப் பணியாற்றி வரும் நல்நூலகர் கயல்விழிக்கு “நூலகச் செம்மல்” என்ற விருது வழங்கி பேரவை சார்பில் பாராட்டி சிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மு. தளவாய் மற்றும் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை முனைவர் இரா. சுபா ஆகியோர் பேரவை சார்பில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
“பார் அதிரும் பாரதி” – சிறப்புரை
கூட்டத்தில் லயன் செல்வராணி முத்துவேல் “பார் அதிரும் பாரதி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மகாகவி பாரதியாரின் கவிதைகள், தேசப்பற்று, சமூகச் சிந்தனை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் விடுதலை உணர்வு குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
பாரதி குறித்து பாப்பாக்குடி அ. முருகன் உரையாற்றினார். வ.உ. சிதம்பரனார் குறித்து பேரவைத் துணைச் செயலர் பேராசிரியர் செந்தில் குமரன் சிறப்புரை வழங்கினார்.
கவிதை நிகழ்ச்சிகள்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஐ. லெட்சுமணன் மற்றும் எல்.ஐ.சி. அய்யப்பன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். சுப்பையா கம்பரின் வாழ்த்துக் கவிதையை தில்லை சுப்பிரமணியன் வாசித்தார்.
இளைஞர் உரை நிகழ்ச்சியில் செல்வன் கீர்த்தி ராஜ் உரையாற்றினார். பேரவை இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளர் இளங்கோ நோக்கர் உரையாற்றினார்.
முனைவர் கா. கவிதா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இறுதியில் சு. அய்யப்பன் நன்றி கூறினார்.
தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் பால சரஸ்வதி, சங்கரநாராயணன், அணஞ்சி, கல்லிடைத் தெய்வீக வாழ்க்கை சங்கத் தலைவர் சதாசிவன், செயலர் இராமகிருஷ்ணன், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகப் பொறுப்பாளர் நல்லாசிரியர் மாடசாமி, கோபால், ராமசாமி, முனைவர் வேலாயுதம், சங்கரசுப்பிரமணியன், கவிஞர் முத்துவேல், திருக்குறள் முருகன் உள்ளிட்டோர் மற்றும் திரளான பேரவைப் புரவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ஆசிரியை செண்பகவல்லி குடும்பத்தினர் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.






