சேரன்மகாதேவியில் அரசு பஸ்சுக்கு நேர்ந்த அவலம்!

சேரன்மகாதேவியில் பழுதான அரசு பஸ்

பயணிகள் தள்ளி ஸ்டார்ட் செய்யும் அவல நிலை

சேரன்மகாதேவி, அக். 3:
சேரன்மகாதேவி பகுதியில் போதிய பராமரிப்பின்றி அரசு பேருந்து பழுதடைந்ததால், அதனை பயணிகளும் நடத்துநரும் தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.

சேரன்மகாதேவியில் இருந்து நெல்லை சந்திப்பு வழியாக மேலப்பாளையம் செல்லும் தடம் எண் 10 அரசு பேருந்து நேற்று மாலை வழக்கம்போல் சேரன்மகாதேவி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அப்போது பேருந்தை இயக்குநர் ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, பேருந்து ஸ்டார்ட் ஆகவில்லை.

இதையடுத்து நடத்துநர் மற்றும் பேருந்தில் இருந்த பயணிகள் இணைந்து பேருந்தை தள்ளியுள்ளனர். சிறிது தூரம் தள்ளிய பின்னர் பேருந்து ஸ்டார்ட் ஆனதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பேருந்து தனது பயணத்தை தொடர்ந்தது.

இந்த பேருந்து சேரன்மகாதேவி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. பேருந்துகளுக்கு முறையான பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகளை மேற்கொள்ளாததன் காரணமாகவே இதுபோன்ற நிலை ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து சேவையின் தரத்தையும் கருத்தில் கொண்டு, சேரன்மகாதேவி பணிமனையில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.