ஊரே சிரிக்குது… எம்எல்ஏ பதவி ஒரு கேடா? இசக்கி சுப்பையாவை கண்டித்து அதிமுக போஸ்டர்: நெல்லையில் பரபரப்பு

நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இசக்கி சுப்பையா. இவர் முன்னாள் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்தவர். சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா உட்பட 7 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை எதிர்த்தும், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடைவிதிக்கக் கோரியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இடைத்தேர்தலை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பதவியையும் ராஜினாமா செய்து விட்டோம். இடைத்தேர்தலும் நடக்காததால் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் இசக்கிசுப்பையா, இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடும் வரை தன்னை எம்எல்ஏவாக தொடரக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அதை ஐகோர்ட் ஏற்கவில்லை. இந்நிலையில் நெல்லையில் முன்னாள் எம்எல்ஏ இசக்கிசுப்பையாவை கண்டித்து அதிமுக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘‘ஊரே சிரிக்குது உன்னை பார்த்து… அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத ஓடுகாலி இசக்கி சுப்பையாவே! உனக்கு எம்எல்ஏ பதவி ஒரு கேடா? என்றும் மக்கள் பணியில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.