முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்பாள் கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் பத்து நாட்கள் சிறப்பு பூஜைகள், வீதி உலா, கலைநிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு

அம்பை, ஜூலை 6:
நெல்லை மாவட்டம், முக்கூடலில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முத்துமாலை அம்பாள் திருக்கோவிலின் ஆனி பெருந்திருவிழா, பக்தர்கள் திரளான பங்கேற்புடன் இன்று கொடியேற்ற நிகழ்ச்சியுடன் சிறப்பாக தொடங்கியது.
ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த ஆனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முதலில் விநாயகரை வழிபட்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டி கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள இசையுடன் கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துடன் பத்து நாள் ஆனி பெருந்திருவிழா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
விழாவில் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கதிரேஷ் ராம்சேட், செயலாளர் லெட்சுமி நாராயணன், பொருளாளர் விநாயக முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட அறங்காவலர்கள், கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கூடல், அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து வழிபட்டனர்.
திருவிழாவையொட்டி அடுத்த பத்து நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி–அம்பாள் திருவீதி உலா, பக்தி இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ முத்துமாலை அம்பாள் திருக்கோவில் அறங்காவலர் குழுவினர், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம், தோரணங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் திருவிழா உற்சாகம் முக்கூடல் பகுதி முழுவதும் நிலவுகிறது.