சேரன்மகாதேவி பேரூராட்சி அலுவலகம் முன் 18வது வார்டு கவுன்சிலர் தனி தர்ணா போராட்டம்!

அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு: சேரன்மகாதேவி பேரூராட்சி அலுவலகம் முன் 18வது வார்டு கவுன்சிலர் தனி தர்ணா போராட்டம்!

சேரன்மகாதேவி, ஜூன் 22:
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பகுதியில் நீண்ட காலமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, 18வது வார்டு கவுன்சிலர் இ.தேவி பேரூராட்சி அலுவலகம் முன்பு தனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
18வது வார்டு மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான தெருவிளக்குகள், சாலை வசதி உள்ளிட்ட பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும், நியாய விலைக் கடை பராமரிப்பு பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், வார்டைச் சேர்ந்த செல்வின் என்பவரது வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பு, பணகுடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குலாய் பதிக்கும் பணிகளின் போது சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், வார்டு கவுன்சிலர் என்ற முறையில் நேரடியாக வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
தனது வார்டு மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும், நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும் கண்டித்து, பேரூராட்சி அலுவலகம் முன்பு இ.தேவி தனி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போராட்டத்தின் போது, சேதமடைந்த குடிநீர் இணைப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும், தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும், நியாய விலைக் கடை பராமரிப்பு பணிகளுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலரே, தனது வார்டுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி தனியாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேரன்மகாதேவி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.