வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பாவாணராயன் – கருப்பண்ணசாமி அங்காள பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு யாகம்
ஸ்ரீமுஷ்ணம், ஜூன் 16:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே சந்தை தோப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாவாணராயன், ஸ்ரீ கருப்பண்ணசாமி, அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று சிறப்பு யாகம் மற்றும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.
இதையொட்டி அதிகாலை முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் திரளாகக் கூடினர். முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை மற்றும் மகா ஆராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, சிறப்பு யாக பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன. யாகத்தில் பக்தர்கள் தங்களது குடும்ப நலன், உடல்நலம், தொழில் வளர்ச்சி மற்றும் மனக்கோரிக்கைகள் நிறைவேற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
மேலும், கோவிலின் பாரம்பரிய வழக்கத்தின்படி பக்தர்கள் மிளகாயை தீக்குண்டத்தில் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தி, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக நன்றி செலுத்தினர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






