சலவைத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா வேறு நபருக்கு மாற்றம்? – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

சலவைத் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா வேறு நபருக்கு மாற்றம்? – நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

ஸ்ரீமுஷ்ணம், ஜூன் 9:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில் சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா முறைகேடாக வேறு நபர்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேத்தாம்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அரசின் திட்டத்தின் கீழ் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பட்டாக்கள் சிலர் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி வேறு நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதையடுத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், மறுவிசாரணை நடத்தக் கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பட்டா பெறுவதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவழித்ததாகவும், அதன் பின்னரும் உரிய உரிமை கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் சலவைத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள், விரைவில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக தலையிட்டு முறைகேடு குறித்து விசாரணை நடத்தி, உரியவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.