அம்பாசமுத்திரம் அருகே ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.57,780 பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, பறக்கும் படைக் குழு – 1B அதிகாரிகள் நேற்று விக்கிரமசிங்கபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விக்கிரமசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் கொண்டு சென்ற பணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திரு. ரா. அப்துல் ரகுமான் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57,780/- ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட தொகை, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமான அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
தேர்தல் காலத்தில் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.