செவிலியர்கள் கைதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் போராட்டம்

கள்ளக்குறிச்சி: சென்னையில், எம்.ஆர்.பி., செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டமும், செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டமும் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செவிலியர் பவானி தலைமை தாங்கினார்.
செவிலியர்கள் சதீஷ்குமார், மூகாம்பிகை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினர்.

எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தாமல் கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மற்றும் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த தமிழக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுவிக்க கோரியும், சங்க மாநில நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, துணைத் தலைவர் செந்தில்முருகன், ஆய்வக நுட்புனர் சங்க மாநில துணைத்தலைவர் அன்பழகன், அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் அன்பு, சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர். செவிலியர் சுகுணா நன்றி கூறினார்.

தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் அரசு மகப்பேறு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அடுத்தடுத்த போராட்டங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் சிரமமடைந்தனர்.