தொழிலதிபர் அதானியுடன் கைகுலுக்கி அளவளாவி ‘அதிர’ வைத்த காங்., ராகுல்

மும்பை: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியை நேரில் சந்தித்தது பேசு பொருளாகியுள்ளது. விமர்சனங்கள் காரணமாக இருவரும் சந்தித்தது தொடர்பான புகைப் படங்கள் வெளியிடப் படவில்லை என கூறப் படுகிறது.

பார்லி.,யாக இருந்தாலும் சரி, தேர்தல் பிரசாரமாக இருந்தாலும் சரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, பிரபல தொழிலதிபர்களான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோரை விமர்சிக்க, காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஒருபோதும் மறந்ததில்லை.
குற்றச்சாட்டு

இரு தொழிலதி பர்களின் வளர்ச்சிக்காகவே பிரதமர் மோடி பாடுபடுகிறார் என, அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த சூழலில், தேசியவாத காங்., – சரத் சந்திர பவார் கட்சித் தலைவர் சரத் பவாரின், 85வது பிறந்த நாள் விழாவுக்காக அரசியல் தலைவர்கள், அனைத்து கட்சி எம்.பி.,க்கள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
பிரிந்து சென்ற தன் உறவினர் அஜித் பவாரையும் அவர் அழைக்க தவறவில்லை. இந்நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்ற நிலையில், தொழிலதிபர் கவுதம் அதானியும் பங்கேற்றார்.அரசியல் ரீதியாக இரு துருவங்களாக இருக்கும் இருவரும் ஒருவரையொருவர் முதல் முறையாக சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பரஸ்பரம் கைகுலுக்கியதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடியும் வரை இருவரும் அருகருகே அமர்ந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை. இதுவரை அரசியல் ரீதியாக விமர்சித்தவருடன், ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட புகைப்படம் வெளியானால், தேவையற்ற விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தால், அந்த புகைப்படம் வெளி யிடப்படவில்லை என, கூறப்படுகிறது.

விருந்து

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சஞ்சு வர்மா கூறுகையில், ”சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதானியை வெளுத்து வாங்கும் ராகுல், தற்போது சரத் பவார் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், அவருடன் ஒன்றாக அமர்ந்து விருந்தை ருசி பார்த்து இருக்கிறார்,” என்றார்.