போனது 3 பஸ் வெள்ளத்தில் சிக்கியது 2 பஸ்; 20 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய நேபாள டிரைவர்: நடந்தது என்ன? பதற்றத்துடன் விவரிக்கும் ஏஜென்சி உரிமையாளர்

சென்னை: நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருக்கயிலாயம் செல்ல சென்ற திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், பாண்டிச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளை சேர்ந்த 57 பேர் சிக்கி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்று இதுவரை தெரியவில்லை. நேபாளத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 57 பயணிகளும் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியில் செயல்படும் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

57 பேரில் 17 பேர் மட்டும் கும்பகோணத்தில் இருந்து கடந்த 23ம் தேதி மதியம் சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றனர். மற்றவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு தனியாக சென்றுவிட்டனர். அவர்களில் தஞ்சாவூர் மேல வெளித்தோட்டம் மேலத்தெருவை சேர்ந்த அன்பழகி, ஜே.ஜே நகரை சேர்ந்த சிவயோகம் ரெங்கநாதன், சித்ரா, தங்கமதி, கும்பகோணத்தை சேர்ந்த உள்ளூர் ரமேஷ், திருமலைராஜன், தையல்நாயகி, சுவாமிமலையை சேர்ந்தவர்களான ராஜ்குமார், ஜெயந்தி, மடத்து தெருவில் வசிப்பவர்கள் சாய்நாத், ஜெயலட்சுமி, கேதாரகௌரி,

டிராவல்ஸ் உரிமையாளர் சையது சாதிக் மகன் சையது உமர் பாரூக், ஏஜென்சியின் மேற்பார்வையாளரான ஓசூரை சேர்ந்த ரகுநாதன் மற்றும் மயிலாடுதுறைவெங்கட்ராமன், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் மற்றும் மணிமேகலை ஆகியோர் கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சியிலிருந்து ஒரு வேன் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். திருச்சியை சேர்ந்த சிவரஞ்சனி, கற்பகம், கிருபாஹரி, வள்ளிநாயகி, சத்தியா ஆகியோரும் சென்னை விமானநிலையத்திற்கு தனியாக சென்றனர்.

பின்னர் அன்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து இவர்களும், மற்ற மாவட்டத்தில் இருந்து வந்தவர்களும் விமானம் மூலம் டெல்லி சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் காத்மாண்டுவில் இறங்கி, அங்கிருந்து மூன்று வேன்களில் நேபாளம்-சீனா எல்லை அருகே சென்று கொண்டிருந்தபோது வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பஸ்களும் சிக்கி உள்ளன. அதில் ஒரு பஸ்சில் பயணம் செய்த 20 பேர் தப்பி கரை ஒதுங்கி உள்ளனர். மீதமுள்ள இரண்டு பஸ்சில் பயணம் செய்த 37 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை.

தற்போது சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற ஏஜென்சியை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சி உரிமையாளர் சையது சாதிக் கூறுகையில், ‘‘எங்கள் நிறுவனத்தில் இருந்து கடந்த 23ம் தேதி இரவு தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்து 57 பேர்களை கைலாய யாத்திரைக்காக அழைத்து சென்றோம்.

கும்பகோணத்திலிருந்து 3 வேன்களில் சென்னை சென்றோம். ஒரே விமானம் மூலம் காத்மாண்டு சென்று அங்கு ரூம் எடுத்து அவர்களை தங்க வைத்திருந்தோம். அன்றிரவு மீட்டிங் முடிந்த மறுநாள் கைலாயத்துக்கு அவர்களை அனுப்பி வைக்கும் வரை நான் அங்கிருந்து அனுப்பி வைத்தேன். பின்னர் நான் கும்பகோணம் புறப்பட்டு வந்துவிட்டேன். 25ம்தேதி அன்று எனது மகன் சையது உமர் பாருக்கிடம் பேசினேன். அனைவரும் நன்றாக உள்ளதாக கூறினார்.

26ம்தேதி நேற்று காலை 8 மணிக்கு மேல் சாப்பிட்டு விட்டு அந்த ஏரியாவை விட்டு புறப்படுகிறோம் அப்பா என்று 9 மணிக்கு எனது பையன் பேசினான். அதுல மூணு பஸ் போனதுல, ஒரு பஸ்ல ரகுன்னு ஒருத்தரு, ரெண்டாவது பஸ்ல பையன், மூணாவது பஸ்ல எங்களோட மயிலாடுதுறையை சேர்ந்த வெங்கட்ராமன் ஆகிய 3 பேரும் ஒரு பஸ்சுக்கு மேற்பார்வையாளராக இருந்தாங்க. அதுல ரகு என்பர் தான் போன் பண்ணாரு. இங்கே நிலநடுக்க விபத்து ஏற்பட்டது. அதில் நில அதிர்வு ஏற்பட்டது.

அதில் இருந்து நாங்க தப்பிச்சு ஒரு பஸ்சை தான் டிரைவர் காப்பாத்தி வெளியே கொண்டு போனார். அடுத்த பஸ் நாங்க திரும்பி பார்க்கும்போது, பள்ளத்துல உருளுவதை பார்த்தோம் என போன்ல சொன்னாரு. கீழே இறங்கி பார்க்க முயன்றபோது அங்க இறங்கி பார்க்க அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அங்கே இருந்தால் நாங்கள் மாட்டிப்போம். நீங்க நேராக மேல போயிருங்க அப்படின்னு சொல்லி மேல அழைச்சிட்டு போயிட்டாரு டிரைவர். அவர் மேல அழைத்து போய் தங்க வச்சதுக்கு அப்புறம் இங்க என்ன நடந்தது என தெரியவில்லை. அப்புறம் அனுமதி பெற்று ராணுவத்தினர் சொன்ன விஷயத்தின் அடிப்படையில் தேடிட்டு இருக்காங்க’’ என்றார்.

* சென்னையைச் சேர்ந்த 4 பேரின் நிலைமை என்ன? பத்திரமாக உள்ளார் நீதிபதி

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கிய ெசன்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கபீர்தாஸ், புவனேஸ்வரி, பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த மாறன், சாந்தி ஆகிய 4 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மானசரோவர் யாத்திரைக்காக சென்ற அவர்கள் நேற்று திபெத்தில் உள்ள கைரோங் செல்ல இருந்ததாக தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் நேபாளம் சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் பத்திரமாக இருப்பதாக குடும்பத்தினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

* வேறு பகுதியில் இருந்ததால் சிதம்பரத்தை சேர்ந்த 8 பேர் உயிர் தப்பினர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாகம் தீர்த்த பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து குமரேசன்(56). இவரது மனைவி மைதிலி (49). சின்ன காஜியார் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்(55), இவரது மனைவி கிருபாகிரி (48), சிதம்பரம் எஸ்.ஆர்.நகரை சேர்ந்தவர் நாவூ(55), இவரது மனைவி விஜயா புவனேஸ்வரி (48), புவனகிரி பகுதியை சேர்ந்தவர் மாறன் (56), இவரது மனைவி சாந்தி (50).

இவர்கள் கடந்த 23ம் தேதி கும்பகோணத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா பயணத்துக்காக நேபாளம் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து சுமார் 17 கி.மீ தூரத்தில் சீனா எல்லையில் உள்ள திமிரே என்ற இடத்தில் தங்கியிருந்தனர். இவர்கள் வெள்ளம் ஏற்பட்ட பகுதியில் இல்லாததால் உயிர் தப்பினர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த குழுவில் இருந்த புவனகிரி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த திரிபுரசுந்தரியை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் அவர் மாயமாகி இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் மகாலிங்கம் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

* 17 பேர் போன் ரீச் ஆகல: தாசில்தார் தகவல்

கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி சூப்பர் யாத்ரா ஏஜென்சியில் விசாரணை நடத்திவிட்டு நிருபர்கள்டம் கூறுகையில், ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 பேருக்கும் தற்போது போன் ரீச் ஆகல. இது குறித்து விசாரணை பண்ணிட்டு இருக்கோம். போனுக்கும் வாட்ஸ்அப் கால் மூலமா முயற்சி பண்ணிட்டு இருக்கோம்.

இதில் ரகு என்பவர் மூலம் தொடர்பு கிடைத்து. தொடர்ந்து விசாரணை பண்ணிட்டு இருக்கோம். சரியான செய்தி வந்ததும் நாங்க சொல்லிடுறோம். இதில் கும்பகோணம், தஞ்சாவூர், அம்மாபேட்டை இந்த பகுதியில் இருந்தும், கும்பகோணத்தில் உள்ளவர்களும் போயிருக்காங்க. அதுல கணவன்-மனைவி, போன்றோரும் போயிருக்காங்க. சில பேர் தனிநபர்களாவும் போயிருக்காங்க’’ என்றார்.

 

* பிச்சுக்கிட்டு தண்ணி வந்தது… முன்னாடி போன வண்டி எதுவுமே இல்லை… வாட்ஸ் அப்பில் திக்…திக்….

கும்பகோணம் சூப்பர் யாத்ரா ஏஜென்சியின் மேற்பார்வையாளரான ஓசூரை சேர்ந்த ரகுநாதன், நேபாளத்திலிருந்து செல்போனில் வாட்ஸ்அப் கால் மூலம் கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி இடம் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரத்தை தெரிவித்த ஆடியோ பதிவில் கூறியதாவது: நாங்க மூணு பேரு ஒவ்வொரு வண்டியில் தனித்தனியாக மேற்பார்வை செய்தபடி பயணித்து போயிட்டு இருந்தோம்.

அப்போது சரியாக திபெத் பார்டர் செல்வதற்கு இன்னும் ஒரு 40 கி.மீ தான் இருக்கும். அப்போது போயிட்டே இருக்கும்போது ஒரு நிலநடுக்கம் மாதிரி திடீர்னு ஒரு பாம் பிளாஸ்ட் ஆன மாதிரி சத்தம் கேட்டது. அப்போது மேகம் அப்படியே முழுவதும் மூடிட்டது. அப்போது புழுதி கிளம்பியதும், ஒண்ணுமே தெரியல. ஒரே சத்தம். அப்படியே தண்ணி பிச்சுக்கிட்டு வந்தது. அப்படி வந்த உடனே எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல.

முன்னாடி போன வண்டி எதுவுமே இல்லை. பின்னாடி நாங்க நின்னுட்டு இருந்த வண்டி பார்த்தீங்கன்னா அப்படியே இருக்க இருக்க தண்ணி அடிச்சு ஒவ்வொன்னா அப்படியே பக்கத்துல இருக்கிற வண்டிகள் எல்லாம் முழுசா மூழ்கி வெள்ள நீர் உள்ளே இழுக்க ஆரம்பிச்சிருச்சு. அப்படியே பின்னாடி இருந்த அந்த ஊரே, அதாவது கடை, லாரி எல்லாமே நீரில் இழுத்துட்டு போயிடுச்சு. எங்களுக்கு ஓரமா கொஞ்சம் இடம் இருந்ததால, நீர் உயர்ந்து கொண்டே இருந்தது.

அதற்குள் ரெண்டு கார் எங்களுக்கு குறுக்க வந்து அப்படியே நகர முடியாம, ஆனதுனால நாங்க கொஞ்சம் தப்பிச்சோம்.  மத்தபடி அந்த எல்லா வண்டிகளும் என்ன ஆச்சுன்னு தெரியல. எல்லாமே தண்ணில அடிச்சுட்டு போச்சு. எங்களோட மத்த ரெண்டு வண்டியும் தெரியல. எங்களுக்கு முன்னாடி போன வண்டி எல்லாமே நீரில் போச்சுன்றாங்க. பின்னாடி வந்த எங்க வண்டி இல்லை. எங்களுக்கு பின்னாடி நிறைய வண்டிங்க, மற்ற கார், லாரிங்க எல்லாமே நீரில் போயிடுச்சு. எங்க வண்டி ஒன்றும், இன்னொன்று எட்டு பேரு மட்டும் அந்த பஸ்ல வந்து இருந்தாங்க.

மேற்கு வங்கத்தில் இருந்தும் தமிழ் ஆளுங்க ரெண்டு பேரும் என மொத்தம் எட்டு பேரு வந்த பஸ் தான் அது. அந்த பஸ் மட்டும்தான் எங்களுக்கு பின்னாடி இருந்தது. அதுவும் கவுந்துருச்சு, ஆனால் அவங்க அதுக்குள்ள சவுண்டு வந்தவுடனே இறங்கிட்டாங்க. கண்ணாடி உடைச்சு இறங்கிட்டாங்க. இதில் காப்பாற்றப்பட்டோர் ஹெலிகாப்டர்ல கூட்டிட்டு போனாங்க. ஆனா அதுல நம்ம தமிழ் ஆளுங்க யாரும் இல்லை.

இதில் அந்த ஊரே அடியோடு நீரில் மூழ்கிடுச்சு. நாங்க ராணுவ பாதுகாப்புடன் ஓரமா இருக்கோம். ஆனா இருந்தாலுமே எங்களுக்கும் கொஞ்சம் ஆபத்து தான் என சொல்றாங்க. இப்போ ராணுவ கட்டுப்பாட்டுலதான் இருக்கோம். இங்க எல்லோரும் ஹிந்தி தான் பேசுறாங்க. அவங்க தொடர்பு கிடைத்தால் கும்பகோணம் தாலுகா அலுவலகத்திற்கு தகவலை தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.