சென்னை:சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, 100. கடந்த, 22ல் வீட்டில் தவறி விழுந்ததால், தலை, கைவிரல்களில் காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின், 24ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மீண்டும் சுவாச பிரச்னை ஏற்பட்டதால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று, நல்லகண்ணுவை சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். சிறப்பான சிகிச்சை அளிக்க, டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்களுடன், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் ராஜ் பி.சிங் மற்றும் தொற்றுநோய் நிபுணர் பிரவீன் ஆகியோரும் சிகிச்சை அளிக்கின்றனர்.
தற்போது, நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சையும், தனிமையும் தான் தேவையாக உள்ளது. அவரது உடல்நிலை குறித்து விபரம் தெரிவிக்க, மருத்துவமனையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தேவையில்லாமல், அவரை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.






